போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது? மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடுமா..?!


போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது? மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் ஓடுமா..?!
x
தினத்தந்தி 8 Jan 2024 6:49 PM GMT (Updated: 8 Jan 2024 6:58 PM GMT)

அறிவிப்பு பலகைகளில் பஸ்கள் ஓடும், ஓடாது என்று மாறி, மாறி அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

சென்னை,

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதி (அதாவது இன்று) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பஸ் ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.

இதனையடுத்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் தீர்வு காணப்படவில்லை. இதற்கிடையே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் எல்.ரமேஷ் தலைமையில் நேற்று பகல் 1 மணி அளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடந்தது.

இதில், ஓய்வூதியர்களுக்கான நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை மட்டும் தற்போது பரிசீலிக்க வேண்டும். மற்ற கோரிக்கைகளை தள்ளிவைக்கலாம் என்று வலியுறுத்தி பேசினர். ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில், சிறிது காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.

ஏற்கனவே அதிக நாட்கள் ஆகி உள்ளதால் இன்னும் காலஅவகாசம் வழங்க கோருவதை ஏற்கவில்லை. அரசின் நிதிநிலைமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த முத்தரப்பு கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பஸ்கள் ஓடாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தற்போது தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தபோதும் தொ.மு.ச மற்றும் ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகரில் பல்வேறு பணிமனைகளுக்கு பஸ்கள் திரும்பி வந்த வண்ணம் உள்ளன. இதன்படி பல்லவன் இல்லம், வடபழனி, அடையாறு ஆகிய முக்கிய பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளதால் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்று பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுவதாக ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் தெரிவித்திருந்தது. மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விலகுகிறோம். பயணிகளுக்கு சிரமம் இன்றி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று இந்திய தேசிய போக்குவரத்து சம்மேளனம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தின் போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னையிலும் அனைத்து பஸ் பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஓடும் பஸ்சை தடுப்பவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்து உள்ளார்.


Next Story