போக்குவரத்து ஊழியர்கள் வாயிற்கூட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் வாயிற்கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பலன்கள், மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட பேட்டா, இன்சென்டிவ் உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்தப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகத்தில் வருகிற 3-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்களிடையே விளக்க பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று மதியம் வாயிற் கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர், சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவானந்தம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டம் குறித்தும் பேசினர். மேலும் வாயிற்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.