போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் -ராமதாஸ்
குத்தகை ஓட்டுனர் முறையை கைவிட்டு போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பஸ் ஓட்டுனர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதனால், சில பணிமனைகளில் இருந்து குறைந்த பஸ் இயக்கப்படுகின்றன. பல பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தனியார் மூலம் ஓட்டுனர்களை நியமிக்கும் முறை கைவிடப் படும் என்று தமிழக அரசு அறிவித்து, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திடீர் போராட்டத்தை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகமும், பணியாளர்களும் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.