6 பேருக்கு இழப்பீடாக ரூ.22 லட்சம் வழங்க பயண ஏற்பாடு நிறுவனத்திற்கு உத்தரவு


6 பேருக்கு இழப்பீடாக ரூ.22 லட்சம் வழங்க பயண ஏற்பாடு நிறுவனத்திற்கு உத்தரவு
x

6 பேருக்கு இழப்பீடாக ரூ.22 லட்சம் வழங்க பயண ஏற்பாடு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரியலூர்

சுற்றுலா செல்வதற்காக...

சென்னையில் வசிக்கும் நண்பர்களான தினேஷ்குமார், நரேஷ், ராஜவேலு, பாரதி ராம், நாராயணமூர்த்தி, டேனியல் ஜேசுதுரை பாண்டியன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொரீசியஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு, யாத்ரா என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் விமான பயணச்சீட்டுகளை பெற்றுள்ளார்கள். இதற்காக ஒவ்வொருவரும் ரூ.72 ஆயிரத்தை அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு விமான நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்கும் சீட்டை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனத்திற்கு பணியாற்றும் ஊழியர்களை அணுகி உள்ளார்கள். ஆனால், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான தீவில் ஒரு நாள் தங்கியிருப்பதற்கான விசா வாங்கவில்லை என்று கூறி விமான நிறுவன ஊழியர்கள் 6 நண்பர்களையும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை. இருப்பினும் அவர்கள் வேறு விமானம் மூலம் சுற்றுலா சென்று திரும்பினர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

மேலும் இது பற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவித்து, தாங்கள் செலுத்திய பயணக்கட்டணத்தை திருப்பி தரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் 6 பேரும் தனித்தனியாக சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு கடந்த ஜூன் மாதம் மாற்றப்பட்டது. இந்த வழக்கை குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதையடுத்து, சேவை குறைபாடு தொடர்பாக, பயண ஏற்பாடு நிறுவனமானது 6 புகார்தாரர்களுக்கும் அவர்கள் செலுத்திய பயண கட்டணம் ரூ.72 ஆயிரம் மற்றும் ஒவ்வொருவருக்கும் இழப்பீடாக ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.22 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

16 வழக்குகளுக்கு தீர்வு

ேமலும் இந்த வழக்கு உள்பட 20 வழக்குகளில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, விசாரணை மேற்கொண்டது. இவற்றில் 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில் தீர்ப்பளித்துள்ளது. அதில் நுகர்வோர்களுக்கு மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story