வெளிநாட்டு பணம் மாற்றும் புரோக்கர்களிடம் சிக்கும் பயணிகள்


வெளிநாட்டு பணம் மாற்றும் புரோக்கர்களிடம் சிக்கும் பயணிகள்
x

வெளிநாட்டு பணம் மாற்றும் புரோக்கர்களிடம் பயணிகள் சிக்கும் நிலை உள்ளது.

திருச்சி

செம்பட்டு:

பணம் மாற்று மையம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான பயணிகள் விமானங்களில் சென்று வருகின்றனர். இதில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பணி நிமித்தமாகவும் பயணிகள் சென்று வருகின்றனர். இதில் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள், அந்த நாட்டு பணத்தையும் கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு கொண்டு வரும் பணத்தை திருச்சி விமான நிலையத்தில் உள்ள பணம் மாற்றும் மையத்தில் மாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசின் அனுமதியுடன் பண மாற்று மையம் உள்ளது. ஆனால் சில பயணிகள் கொண்டுவரும் வெளிநாட்டு பணத்தை அங்கு மாற்றாமல், சட்டத்துக்கு புறம்பாக வெளியில் மாற்றுவதற்கு முற்படுகின்றனர். இவ்வாறு மாற்றும்போது, பணத்தை மாற்றிக்கொடுக்கும் நபர்களிடம் அதிக அளவிலான தொகையை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

பணம் பறிபோகிறது

அதாவது இந்த பண பரிவர்த்தனையின்போது பயணிகள் கொண்டு வரும் பணத்தில் குறைந்த அளவே கமிஷன் எடுத்துக் கொள்வதாக கூறி, அவர்களிடம் இருந்து அதிக அளவில் பணம் பறிக்கும் நிலை உள்ளது.

ஆனால் இதனை அறியாத பயணிகள் சுமார் 2 அல்லது 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் வேலை செய்து, அதில் கிடைத்த தொகையை கொண்டு வந்து விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் பணம் மாற்றும் புரோக்கர்களிடம் மாற்றி, இந்திய ரூபாயை பெறுகின்றனர். பின்னர் அதிக பணம் பறிபோனதை அறிந்து பயணிகள் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது.

நிரந்தர தீர்வு

இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான பணப்பரிவர்த்தனை நடத்தும் புரோக்கர்களை விமான நிலைய அதிகாரிகள் பலமுறை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது திருச்சி மாநகர போலீசார் பலமுறை நடவடிக்கை எடுத்தபோதும், மீண்டும் இந்த நிலை தொடர்கிறது. எனவே இதனை தவிர்க்கும் வகையில் மாநகர போலீஸ் அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story