வீட்டில் தூங்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை
வீட்டில் தூங்கிய டிராவல்ஸ் உரிமையாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மணப்பாறை:
டிராவல்ஸ் உரிமையாளர்
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு லெட்சுமி நாராயணன் (வயது 31) உள்பட 7 மகன்கள். இவர்களில் டிரைவரான லெட்சுமி நாராயணன் சொந்தமாக கார்கள் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். நேற்று காலை அவரது பெற்றோர், ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தூங்கச்சென்ற லெட்சுமி நாராயணன், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சாப்பிடுவதற்காக அவரை, அவரது சகோதரர் அழைக்கச் சென்றார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் லெட்சுமி நாராயணன் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அறை முழுவதும் ரத்தமாக கிடந்தது.
கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர், லெட்சுமி நாராயணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்ததால் லெட்சுமி நாராயணன் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதேபோல் மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.