கர்நாடக பகுதி வழியாக சுற்றி செல்லும் அவலம்: சாலை வசதி இல்லாமல் தவிக்கும் தாளவாடி மலை கிராம மக்கள்

சாலை வசதி இல்லாமல் தவிக்கும் தாளவாடி மலை கிராம மக்கள் கர்நாடக பகுதி வழியாக சுற்றி சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள்.
தாளவாடி
சாலை வசதி இல்லாமல் தவிக்கும் தாளவாடி மலை கிராம மக்கள் கர்நாடக பகுதி வழியாக சுற்றி சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள்.
கர்நாடக பாதை
ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியாகவும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தால் நுழைவு பகுதியாகவும் இருப்பது தாளவாடி மலைப்பகுதி. தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடி அமைந்துள்ளதால், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் விரைவில் அங்கு செல்லாமல் உள்ளது.
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்ல கர்நாடக மாநில பகுதிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிதான், மீண்டும் தமிழக பகுதியான தாளவாடியை அடைய முடியும். கர்நாடக மாநிலத்தில் திடீரென போராட்டங்கள் நடைபெறும் போது தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
தனித்தீவு
இதுபற்றி தாளவாடி மலை கிராம மக்கள் கூறியதாவது:-
தாளவாடி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டாலும் தனித்தீவு போலத்தான் உள்ளது. தாளவாடி, திகனாரை, பைனாபுரம் மல்லன்குழி, இக்களூர், நெய்தளாபுரம், தலமலை, ஆசனூர், திங்களூர், கேர்மாளம் ஆகிய 10 ஊராட்சிகள் தாளவாடி தாலுகாவில் உள்ளன. இதில் 7 ஊராட்சிகள் தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ளன. மீதமுள்ள ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநிலத்துக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்து, அதன்பின்னர்தான் தமிழக பகுதிக்கு வந்து 3 ஊராட்சிகளையும் சென்றடைய முடியும். இதனால் நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறோம்.
நீண்டநாள் கோரிக்கை
கர்நாடக மாநிலத்தில் அடிக்கடி காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி கர்நாடக பாதை அடைக்கப்படுகிறது. பாலப்படுகை என்ற இடத்தில் தமிழக வனப்பகுதியின் கட்டுப்பாட்டில் மண்சாலை உள்ளது. அந்த மண் சாலையை தார்சாலையாக அமைத்தால் நாங்கள் கர்நாடக பகுதிக்கு செல்ல வேண்டியது இல்லை. புல், பூண்டு முளைத்து புதர்போல் காணப்படும் இந்த பாதையை செப்பனிட்டு தார்சாலையாக்கினால் தாளவாடியில் இருந்து எளிதாக ஆசனூர் செல்ல முடியும். அதேபோல் அங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு செல்லலாம். மேலும் பயண நேரமும் மிச்சமாகும் நம்முடைய ஊருக்கு வர பக்கத்து மாநிலத்துக்கு உள்பட்ட பகுதிக்குள் சென்று வரவேண்டிய அவசியமும் இருக்காது. எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி பெற்று பாலப்படுகையில் இருந்து ஆசனூர் காரப்பள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைத்தால் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






