அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல்: தமிழ்நாடு கவர்னர் பேச்சு


அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல்: தமிழ்நாடு கவர்னர் பேச்சு
x

அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை,

பிரதமர் மோடி பற்றிய 'மோடி20 நனவாகும் கனவுகள்', 'அம்பேத்கர் மற்றும் மோடி-சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்' ஆகிய 2 புத்தகங்களின் ஆங்கிலம், இந்தி பதிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கின்றன. அதன் தமிழ் பதிப்பு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழ் பதிப்பு புத்தகங்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டு, பேசியதாவது:-

இதுதான் சமூக நீதியா?

சமுதாய பாகுபாட்டை போக்க நாம் என்ன செய்துள்ளோம்? சமூகநீதி பற்றி பரவலாக பேசி வருகிறோம். ஆனால் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பதும், கோவிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பதும், அங்கன்வாடியில் தரையில் அமரவைப்பதுமான நிகழ்வுகளும் நடக்கின்றன. இதுதான் சமூகநீதியா?.

தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் தமிழ்நாட்டில் தொடருகிறது. இத்தகைய கொடுமைகள் இருக்கும் நேரத்திலும் சமூகநீதியை பேசிக்கொண்டிருக்கிறோம். தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பல மாடல்கள்

வறுமை, பசி, தீண்டாமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால் இந்தியாவை ஒரே குடும்பமாக மோடி பார்த்ததால், இன்று இந்தியா பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்களை கண்டுள்ளது. "பாரத் மாதா'' என்பது அரசியல் வசனம் இல்லை. அது உணர்வுபூர்வமானது. இந்தியா என்பது ஒரே குடும்பம். இந்தியா முழுமைக்கும், அனைவருக்குமான வளர்ச்சியை மோடி தந்துகொண்டிருக்கிறார்.

பணம் படைத்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் சுகாதார சேவை கிடைத்து வருகிறது. என்ன மாடல் என்றே தெரியாமல் சிலர் பல மாடல்களை சொல்லி கொண்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரத்திலும் அடிப்படை கட்டமைப்பை மோடி மாற்றிக்காட்டியிருக்கிறார்.

இந்தியாவின் மாடல்

இந்தியாவில் இப்போது உருவாகியிருக்கும் மாற்றம், எழுச்சி உலக நாடுகளின் வரிசையிலும் முக்கிய மாற்றத்தை உருவாக்கப்போகிறது. 1 பில்லியன் டாலர் செலவில் ஹம்பன் தோட்டா துறைமுகத்தை இலங்கையில் சீனா கட்டமைத்தது. ஆனால், இன்று அந்த துறைமுகம் முழுவதும் சீனாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. ஆனால் இந்தியாவோ இலங்கையில் மருத்துவமனைகள், சாலைகள், வீடுகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தந்துள்ளது. இது தான் இந்தியாவின் மாடல். அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுவதுதான் இந்தியாவின் மாடல்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் மோடி என்று சொல்வதில் எனக்கு துளியும் தயக்கமில்லை. முத்தலாக் முறையை நீக்கி முஸ்லிம் சகோதரிகளுக்கு தீர்வு கண்டவரும் மோடிதான். மோடி அனைவரையும் ஒரே குடும்பமாக கருதுகிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரே குடும்பம் என்பதில் உள்ளது.

உலகிற்கு தலைமை தாங்குவோம்

நேர்மறை எண்ணத்தை பரவலாக்குவோம். எதிர்மறை எண்ணங்களை விட்டொழிப்போம். நம் தேர்வு நேர்மறையா? எதிர்மறையா? என்பதை நாம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

உலகத்தையே ஒரே குடும்பமாக கருதி, பாதுகாப்பாக வழிநடத்தும் திறன் உடையவர்தான் மோடி. அனைவரும் இந்த புத்தகங்களை படிக்க வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையாக இந்தியா உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story