ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த மாடுகளுக்கு சிகிச்சை


ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த மாடுகளுக்கு சிகிச்சை
x

மேட்டுப்பாளையம் அருகே ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த மாடுகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த மாடுகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறவை மாடுகள்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை கல்லார் ரெயில்வே கேட் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் ராஜ்குமார் (வயது 39). இவர் தனது தோட்டத்தில் பாக்கு, வாழை பயிர்களை பயிரிட்டு உள்ளார். தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த மாடுகள் பவானி ஆற்றின் கரையோர பகுதிகள், மலையடிவார பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு செல்கின்றன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 4 பசு மாடுகள், 36 எருமை மாடுகள் சோர்வுடனும், உடலின் மேல் பகுதியில் கொப்பளங்களுடனும் காணப்பட்டது. இது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாம் என ராஜ்குமார் நினைத்தார். ஆனால், நேற்று மாடுகளின் மேல் தோல் கருகி உரிந்ததுடன், உடல் முழுவதும் படுகாயம் இருப்பது தெரிந்தது. பாதிக்கப்பட்ட கறவை மாடுகள் உணவு ஏதும் உட்கொள்ள முடியாமல் வலியில் துடித்தன.

ஆசிட் வீச்சு

இதனால் ராஜ்குமார் கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடிய போது, ஆசிட் வீச்சால் மாடுகளுக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளது என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது தோட்டத்தின் அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சரியின் உரிமையாளர், நர்சரியில் புகுந்த மாடுகள் நாற்றுகளை சேதப்படுத்தியது என்றும், இதற்கு இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் நீயும் இழப்பை சந்திப்பாய் என மிரட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நான் எனது மாடுகள் நர்சரியில் மேய்ச்சலுக்கு வர வாய்ப்பில்லை என கூறினேன். இதனால் முன்விரோதம் காரணமாக மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக புகாரில் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ குழுவினர் சிகிச்சை

இந்தநிலையில் மண்டல கால்நடை மருத்துவத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் காயமடைந்த கறவை மாடுகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தடினமான தோல் கொண்ட எருமை மாடுகளின் உடல் வெந்துள்ளது. வீரியமிக்க ஆசிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தொடர் சிகிச்சையின் மூலம் மாடுகளின் உயிரை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது என்று மண்டல கால்நடை மருத்துவத்துறை இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்தார். கறவை மாடுகள் மீது திட்டமிட்டு ஆசிட் வீசப்பட்ட இந்த கொடூர சம்பவம் விலங்கின ஆர்வலர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story