கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
தினத்தந்தி செய்தி எதிரொலியை தொடர்ந்து கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு, பெரிய செவலை, டி.கொலத்தூர், டி.புதுப்பாளையம், துலங்கம்பட்டு, துலுக்கப்பாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கோமாரி நோய் தாக்குதலால் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும் கால்நடை மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி நாளிதழில் நேற்று வெளிவந்தது. இதையடுத்து கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் விழுப்புரம் கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) சாந்தி, உதவி இயக்குனர் மோகன், கால்நடை உதவி மருத்துவர்கள் ரதி, தியாகீஸ்வரன், கால்நடை ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் காரப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.