இலுப்பூரில் தோல் நோயுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை
இலுப்பூரில் தோல் நோயுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அன்னவாசல், இலுப்பூர், காலாடிப்பட்டி சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வீதிகள் மற்றும் நடுரோட்டில் படுத்துக்கொள்வதால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை மற்றும் குப்பை தொட்டியில் உணவைதேடி அங்கும், இங்குமாக செல்கின்றன. குறிப்பாக, கூட்டமாக சேரும் நாய்கள் திடீரென்று சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் பலர் அலறியடித்து ஓடுகின்றனர். எனவே, தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இதேபோல் அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக நாய்களின் முடிகள் உதிர்ந்து தோலில் புண் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சில நாய்கள் கடைவீதி, குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. இதனால் இந்த நோய் மற்ற நாய்களுக்கும் பரவி வருகிறது. எனவே, நோய் பாதிப்புள்ள நாய்களால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக தன்னார்வலராக இலுப்பூரில் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் இலுப்பூரில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நோய் வாய்ப்பட்ட நாய்களை பிடித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இதே போன்று விரைவில் அன்னவாசலில் உள்ள நோய் வாய்ப்பட்ட நாய்களுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாகவும், அதனால் ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் நாய்களை அடித்து கொன்றுவிட வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர் சரத்பவார் கூறினார்.