சாலையோரம் கனி தரும் மரங்களை வளர்க்க வேண்டும்
சாலையோரம் மற்றும் தரிசு நிலங்களில் கனி தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையோரம் மற்றும் தரிசு நிலங்களில் கனி தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்சிஜன் தொழிற்சாலை
மரம் என்பது மண்ணுக்கும் மனிதனுக்கும் வரம்...ஒவ்வொரு மரமும் ஒரு குட்டி ஆக்சிஜன் தொழிற்சாலையாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகையும், வாகனப்போக்குவரத்தும், தொழிற்சாலைகளும் பெருகி விட்ட இன்றைய நிலையில், காற்றை மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்குமானதாக இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பது மரங்கள் என்பது மிகையாகாது.
வளர்ச்சி நோக்கில் ஒருபுறம் மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் அரசும், சமூக ஆர்வலர்களும் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் நிழல் தரும் மரங்கள் மட்டுமே நடவு செய்யப்பட்டு வரும் நிலையில் கனி தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் நடவு செய்யப்படுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
நாவல் பழங்கள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
'மரங்கள் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மரமும் பறவைகள் மற்றும் சிற்றுயிர்களின் வீடு. கனி தரும் மரங்களாக இருந்தால் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் உணவு உற்பத்தித் தொழிற்சாலை. ஆனால் சமீப காலங்களாக கனி தரும் மரங்களை நடவு செய்வது குறைந்து வருகிறது.
இதற்கு பறவைகளின் வரவை தொல்லையாக பார்க்கும் மனோபாவம் அதிகரித்து வருவதே முக்கிய காரணமாகும்.அத்துடன் கனிகளை காசு கொடுத்து கடையில் வாங்குவதே கவுரவம், சாலையோர மரங்களில் பறிப்பது அவமானம் என்பது போன்ற மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் உடுமலை-திருப்பூர் சாலையில் குடிமங்கலம் பகுதிக்கு அருகில் சாலையோர நாவல் மரத்தில் ஆர்வமாக பழங்களை பறித்துச் செல்பவர்களை காண முடிகிறது. அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் வாகனத்தை நிறுத்தி அதன் மீது ஏறி நாவல் பழங்களை பறிக்கின்றனர்.
கனி தரும் மரங்கள்
ஆந்திராவிலிருந்து வரும் ஹைபிரிட் நாவல் பழங்கள் கண்ணுக்கு அழகாகவும் நாவுக்கு சுவையாகவும் இருக்கின்றன.
ஆனாலும் நம்ம ஊர் நாட்டு ரக நாவல் பழங்களின் மருத்துவ குணங்கள் அதில் வராது என்று தெரிவித்தனர். சமீப காலங்களாக அத்தி மரம், ஆலமரம் போன்ற மரங்களைக் காண்பதே அபூர்வமான விஷயமாக மாறி வருகிறது. இப்படியே போனால் அவையெல்லாம் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் சேர்ந்து விடும் போல இருக்கிறது.
இனிவரும் காலங்களில் கனி தரும் மரங்களான நாவல், அத்தி, ஆல், அரசு, வேம்பு, மா, புளி உள்ளிட்ட மரங்களை நடவு செய்ய வேண்டும். தனக்கு மட்டுமான வாழக்கையை மனிதன் வாழாமல் அனைத்து உயிர்களுக்குமான வாழ்க்கையை வாழ தயார்படுத்த வேண்டும்'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.