வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

உடுமலை பகுதியில் வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை பகுதியில் வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்சிஜன் தொழிற்சாலை

ஆதி மனிதனின் நண்பனாக மரங்களே இருந்தது. மரக்கிளைகளே மனிதர்கள் தங்கும் வீடானது. விலங்குகளிடமிருந்து தப்பிக்க மரங்களே ஆயுதம் தந்தது. அடுத்த கட்ட நாகரிக வளர்ச்சியின் போது மரங்கள் விறகுகளைத் தந்தது.

இப்படி மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு உதவியாக இருந்ததால் தான் மரங்களைத் தெய்வமாக வணங்கத் தொடங்கினார்கள்.

கோவில்களில் தல விருட்சங்களை நட்டு வைத்துப் பராமரித்தார்கள். இதனால் மரங்கள் பாதுகாக்கப்பட்டது. மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தரும் தொழிற்சாலைகளாக மரங்கள் ஆங்காங்கே தலை நிமிர்ந்து நின்றது. காலப்போக்கில் மரங்களின் பாதுகாப்பில் அக்கறை குறைந்ததால் ஒருசில நகரங்களில் காற்றைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பராமரிப்பில் அலட்சியம்

இந்தநிலையில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என்று பலதரப்பினரும் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

ஆனால் வளர்ந்த மரங்களைப் பராமரிப்பதில் பல தரப்பிலும் அலட்சியம் காட்டப்படுவதால் மரங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மரங்களைப் பராமரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.

மரக்கன்றுகள் நடுவதில் காட்டப்படும் ஆர்வம் வரவேற்புக்குரியதாகும். அதேநேரத்தில் நட்ட கன்றுகளை பாதுகாப்பதிலும், வளர்ந்த மரங்களைப் பராமரிப்பதிலும் காட்டப்படும் அலட்சியம் களையப்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சாலையோர மரங்கள் பராமரிப்பில் கூடுதல் அக்கறை காட்டப்பட வேண்டும்.

விபத்துக்கள்

உடுமலைக்கு அருகில் பல இடங்களில் மரங்கள் காய்ந்தும், கரையான்களால் அரிக்கப்பட்டும், காற்றில் சாய்ந்தும் வீணாகி வருகிறது. காய்ந்த மரங்களை அப்புறப்படுத்துவதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இது பல விபத்துக்களுக்குக் காரணமாக மாறும் அபாயம் உள்ளது.

பல பகுதிகளில் மரங்களுக்கு அடியில் குப்பைகளைக் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அடிப்பகுதி கருகி பல மரங்கள் காய்ந்து வீணாகியுள்ளது. எனவே வளர்ந்த மரங்களைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Related Tags :
Next Story