சாலையோர மரங்கள் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார்
விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் சாலையோர மரங்கள் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் சாலையோர மரங்கள் திட்டமிட்டு தீர்த்துக்கட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டு
ஒவ்வொரு மரமும் மனிதனுக்குக் கிடைத்த வரம் என்று சொல்லலாம். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் மூச்சுக்காற்றை மட்டுமல்லாமல் உண்ண உணவு, ஒதுங்க நிழல், இருக்க இருப்பிடம் என பலவிதமான நன்மைகளை மரங்கள் செய்து வருகின்றன. இதனால்தான் நமது முன்னோர்கள் மரம் வளர்ப்பில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் தற்போது மரம் நடும் விழாக்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் வளர்ந்த மரங்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டாமல் அவற்றை அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சங்கிலித்தொடர்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
'மரம் வளர்த்தால் மழை பொழியும்...மழை பொழிந்தால் மரம் வளரும்...இது ஒரு சங்கிலித் தொடராக உள்ளது. ஆனால் இந்த சங்கிலித் தொடர் அறுபடும் போது பருவம் தவறிய மழைப்பொழிவு, வறட்சி, வெள்ளம் என பலவிதமான பாதிப்புகளை சந்திக்க வேண்டியதுள்ளது. நமது முன்னோர் சாலை ஓரங்கள், நீர் நிலைகளின் கரைகள், பொது வெளிகள் மற்றும் வீட்டைச்சுற்றிலும் நிழல் தரும் மரங்களை மட்டுமல்லாமல் கனி தரும் மரங்களையும் நட்டு வளர்த்தார்கள்.
அவை பல பறவைகளுக்கு புகலிடமாக விளங்கியது. ஆனால் சமீப காலங்களாக கனி தரும் மரங்களை நடுவதில் தயக்கம் காட்டப்படுகிறது. கனி தரும் மரங்களை நட்டால் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருகிறது. அவை கூச்சலிடுவதுடன், எச்சமிடுவதால் தொல்லையாக உள்ளது என்பது இன்றைய இளைய தலைமுறையினரின் குற்றச்சாட்டாக உள்ளது. எதையெல்லாம் ரசித்தோமோ அதையெல்லாம் இன்று வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைக்குப்பைகளைப் பற்றி யோசித்து, மரங்கள் தரும் ஆக்ஜிசனை இழக்கத் தயாராகி விடுகிறோம்.
மாற்றுப்பயன்பாடு
இந்தநிலையில் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல விளை நிலங்கள் விவசாயிகளால் கைவிடப்பட்டு விற்பனைப் பொருளாக மாறி விட்டது. அவ்வாறு சாலை ஓரங்களில் உள்ள இடங்களை படிப்படியாக விவசாயம் தவிர்த்த மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. பணம் படைத்தவர்கள் பலர் விளை நிலங்களை விலைக்கு வாங்கி 3 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்யாமல் தரிசாக விட்டு வைக்கின்றனர். பின்னர் அதனை வீட்டு மனை, வணிக நிறுவனங்கள் என மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கு இடையூறாக இருக்கும் சாலை ஓர மரங்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டும் அவலம் அரங்கேறி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மரங்களுக்கு அடியில் தொடர்ச்சியாக குப்பைகளைக் கொட்டி தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இவ்வாறு பலமுறை தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் அடி மரம் சேதமாகி காய்ந்து விடுகிறது. பின்னர் அந்த மரம் சாய்ந்து விழுந்து விடுகிறது, அல்லது சாய்க்கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல் ஒருசில இடங்களில் நன்கு முதிர்ந்த, பல ஆண்டுகள் கடந்த மரங்களில் உள்ள பொந்துகளில் தீ வைத்துக் கொளுத்தி விடுகின்றனர். சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர முறையான பராமரிப்பில்லாமல் கரையான்கள் தாக்குதல் உள்ளிட்டவற்றால் பல மரங்கள் அழிந்து வருகிறது.
இந்தநிலையில் நூதன முறையில் திட்டமிட்டு தீர்த்துக் கட்டப்படும் மரங்களைக்காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மரக்கன்றை நட்டு, பல ஆண்டுகள் அதனை பராமரித்து, மரத்தை உருவாக்குவதற்குப்பதிலாக முதிர்ந்த மரங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மரங்களை அழிப்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இ்வ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.