சமூக காடுகள் விரிவாக்க திட்டத்தின் சார்பில்பொதுமக்கள் இலவச மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்


சமூக காடுகள் விரிவாக்க திட்டத்தின் சார்பில்பொதுமக்கள் இலவச மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 27 April 2023 12:30 AM IST (Updated: 27 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க சரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு பசுமை போர்வை திட்டம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்குதல் திட்டம் ஆகியவை வனத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தேக்கு, சந்தனம், புங்கன், பூவரசு, மலைவேம்பு, நாட்டு வேம்பு, நாட்டு நாவல் உள்பட 18 வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவுக்கு பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளன. நடப்பு ஆண்டில் கிடைக்கும் மழையை பயன்படுத்தி நடவு செய்யும் வகையில் விவசாயிகளுக்கும், மரம் வளர்ப்பில் ஆர்வம் உள்ள பொதுமக்களுக்கும் இந்த மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

தொப்பூர் அருகே கட்டமேடு பகுதியில் உள்ள மத்திய நாற்றங்கால் வளாகத்தில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரசு நிலங்கள், தனியார் நிலங்கள், கோவில் நிலங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், ஊராட்சி நிலங்கள், விவசாய பட்டா நிலங்கள், சாலையோர நிலங்கள், ஏரிக்கரையோர பகுதிகள் ஆகியவை இவ்வகை மரக்கன்றுகளை நடவு செய்ய தகுதியான நிலங்கள் ஆகும். ஆதார், பட்டா, சிட்டா ஆகியவற்றின் 2 நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றுடன் தர்மபுரியில் உள்ள சமூக காடுகள் மற்றும் விரிவாக்க சரக அலுவலகத்தை அணுகி விருப்ப மனு அளித்து மரக்கன்றுகளை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story