மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு


மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
x

மின்கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருச்சி

ஜீயபுரம்:

பெட்டவாய்த்தலை அருகே உள்ள பெருகமணியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பழமையான புளியமரம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால், அந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து அருகில் சென்ற உயர் மின் அழுத்த கம்பிகளின் மீது விழுந்தது. இதனால் அருகில் உள்ள மின்மாற்றியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு, மின்மாற்றி ஒரு புறமாக சாய்ந்தது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை அந்த மரக்கிளையை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது உடைந்து விழுந்த மரக்கிளையில் இருந்து விஷ வண்டுகள் பறந்ததால், மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடனும், அச்சத்துடனும் அப்பகுதியை கடந்து சென்றனர். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மரக்கிளையை அப்புறப்படுத்தியதையடுத்து, மின்வாரிய பணியாளர்கள் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நேற்று மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story