தண்டவாளத்தில் மரம் விழுந்தது: ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவை ரத்து

தண்டவாளத்தில் மரம் விழுந்தது: ஊட்டி-குன்னூர் மலை ரெயில் சேவை ரத்து.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் ஆங்காங்கே சாலையில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுகின்றன.
இந்தநிலையில் நேற்று ஊட்டி-குன்னூர் இடையே லவ்டேல் பகுதியில் ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக நேற்று காலை 7.45 மணிக்கு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்படும் மலை ரெயில் (06141) சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் ஊட்டியில் இருந்து காலை 9.15 மணிக்கு குன்னூருக்கு செல்லும் மலை ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், திடீரென ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். அதன்பின்னர் அவர்கள் பஸ் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டி, குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.






