வேளாண்மைத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள்
மடத்துக்குளம் வேளாண்மைத்துறையின் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதால் விவசாயிகள் முன் பதிவு செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரப்பயிர் சாகுபடி
மண்ணையும் மனிதர்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மரங்களின் பங்கு பெருமளவு உள்ளது.அதனைக் கருத்தில் கொண்டு மரம் வளர்ப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் முயற்சியால் சாலையோரங்கள் மற்றும் பொதுவெளிகளில் மரம் வளர்ப்பு என்பதில் அரசுத்துறைகள் மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள், தனியார் என அனைத்து தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் மரம் வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருவதுடன் பலவிதமான நன்மைகள் தரக்கூடியதாகவும் உள்ளது.இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொதுவாக மரப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பயிராக மரப்பயிர்கள் சாகுபடி செய்ய வசதியில்லாதவர்கள் ஊடுபயிராகவோ, வேலிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம்.இவ்வாறு மரப்பயிர்களை சாகுபடி செய்யும்போது அவை அரணாக நின்று பலத்த காற்றினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க உதவுகிறது. மேலும் பறவைகளின் இருப்பிடமாக இருப்பதன் மூலம் பயிருக்கு தீங்கு தரும் பூச்சிகளுக்கு எதிரியாக இருக்கிறது.மேலும் மழைப்பொழிவில் பெரும் பங்களிப்பை அளித்து விவசாயத்துக்கு உதவுகிறது.
பருவமழைக்காலம்
மரப்பயிர்கள் சாகுபடிக்காக மடத்துக்குளம் வட்டாரத்துக்கு நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையின் நாற்றுப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான தேக்கு, மகாகனி, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வேளாண்மைத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. வரப்பு ஓரங்களில் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 400 மரக்கன்றுகள் வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வரும் பருவமழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடவு செய்வதன் மூலம் சீரான வளர்ச்சியைப் பெற முடியும். எனவே வேளாண்மைத்துறை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.