2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன


2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை, வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப் பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை, வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதனால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப் பட்டது.

பலத்த மழை

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆனைமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நள்ளிரவு 12 மணியளவில் வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே இருந்த 50 ஆண்டு பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அருகில் பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாயும் உடைந்தது.

மின்கம்பிகள் அறுந்தன

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் மின் வாள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பின்னர் ேபாக்குவரத்து சீரானது. மேலும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து, உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் இருந்த வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த மின்கம்பத்தில் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின் வினியோகம் பாதித்தது. இதை அறிந்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சோலையாறு அணை

வால்பாறையில் கடந்த 95 நாட்களுக்கு பிறகு சோலையாறு அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 160 அடியில் இருந்து குறைந்து நேற்று முன்தினம் காலையில் 159 அடியானது.

அதன்பின்னர் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளளவை தாண்டி நிம்பியது. மேலும் சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்ல தொடங்கியது. நேற்றும் மதியம் 2 மணியில் இருந்து மீண்டும் வால்பாறையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாணவ-மாணவிகள், தோட்ட தொழிலாளர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.


Next Story