வனத்தை ஒட்டிய பகுதிகளில் அகழிகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் யானை தாண்டா பள்ளங்கள் எனப்படும் அகழிகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.கூறினார்.
வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் யானை தாண்டா பள்ளங்கள் எனப்படும் அகழிகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.கூறினார்.
பெண் படுகாயம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே புல்வெளிகொட்டாய் பகுதியை சேர்ந்த ஜெயசங்கரின் மனைவி வசந்த்ரா (வயது 45) வயல்வெளிக்கு சென்றபோது காட்டு யானைகள் தாக்கி படுகாயம் அடைந்தார். அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் யானைகள் தாக்கி படுகாயம் அடைந்த பெண்ணை, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். அவருக்கு போதுமான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவத்துறை அதிகாரிகளுடன் கேட்டுக்கொண்டார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் யானைகள் தொடர்ந்து இறப்பதும், யானைகள் தாக்கி மனிதர்கள் இறப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. குறிப்பாக யானைகள் தாக்கி ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் கிராமங்களுக்கு புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் மிகுந்த பாதிப்பு அடைந்து உள்ளனர். இந்த சம்பவங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சோலார் மின்வேலி
தற்போது தமிழகத்தில் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். வனவிலங்குகள் வனத்தை விட்டு மக்கள் இருக்கும் பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் வந்து சேதப்படுத்தி வருகிறது. வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் யானை தாண்டா பள்ளங்கள் எனப்படும் அகழிகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தோண்டப்படும் பழங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இதேபோல் சோலார் மின் வேலி அமைத்து யானைகள் கிராம பகுதிக்குள் வராமல் தடுக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் செந்தில், சிவப்பிரகாசம், நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.