நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் -தமிழக அரசு உத்தரவு


நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் -தமிழக அரசு உத்தரவு
x

நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தை தமிழ்நாட்டில் 37-வது இனமாக பழங்குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர், அனைத்து அரசியலமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களைப் பெற தகுதியுடைய ஏதுவாக தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் ஆகியோருக்கு நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும்.

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழை மின்வடிவிலான முறையில் பெற்றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு, புதிய மின்வடிவிலான சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அட்டை வடிவிலான, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வைத்துள்ளவர்களின் சாதிச் சான்றிதழை ரத்து செய்து, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story