பலா பழங்களை விற்பனை செய்யும் பழங்குடியின விவசாயிகள்


பலா பழங்களை விற்பனை செய்யும் பழங்குடியின விவசாயிகள்
x

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரம் பழங்குடியின விவசாயிகள் பலா பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரம் பழங்குடியின விவசாயிகள் பலா பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

பலா பழங்கள்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது வழக்கம். சுவை மிகுந்த பலா பழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

அரவேனு, கொட்டக்கம்பை, முள்ளூர், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பலா பழங்களை அடுக்கி வைத்து, பழங்குடியின விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பலா பழம் ரூ.200 முதல் ரூ.400 வரை அளவிற்கு தக்கவாறு விற்பனை செய்யப்படுகிறது. பலாச்சுளை ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. இந்தநிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலா மரங்களில் கொத்துக் கொத்தாக பலா பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன.

சுற்றுலா பயணிகள்

இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அப்பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.

இதுகுறித்து பழங்குடியின விவசாயிகள் கூறும்போது, குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பழங்கள் அதிக அளவில் காய்த்து உள்ளன.

சொந்த மரங்களில் விளைந்து உள்ள பலா பழங்களை பறித்து, சரக்கு வாகனங்கள் மூலம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலைக்கு கொண்டு வந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். சுற்றுலா பயணிகள் பழங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதன் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது என்றனர்.


Next Story