நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஜனாதிபதியை சந்திக்க பழங்குடியின மக்கள் டெல்லி பயணம்


நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஜனாதிபதியை சந்திக்க பழங்குடியின மக்கள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 10 Jun 2023 7:00 AM IST (Updated: 10 Jun 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஜனாதிபதியை சந்திக்க பழங்குடியின மக்கள் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஜனாதிபதியை சந்திக்க பழங்குடியின மக்கள் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.

பழங்குடியின ஜனாதிபதி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவர்தான். இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு அலங்கரித்துக் கொண்டு உள்ளார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

பழங்குடியினத்தை சேர்ந்த பெண், முதல் முறையாக நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதால் நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியின குழு சார்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க திட்டமிடப்பட்டது.

பயணம் ரத்து

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி முதல் முறையாக தமிழகம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, 19-ந்தேதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வந்து போர் நினைவுச்சின்னத்தில், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது நீலகிரியை சேர்ந்த 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள், அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவியதாலும், ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருந்ததாலும் பயணம் ரத்து செய்யப்பட்டது. அன்றைய தினம் கோவையில் இருந்தவாறு ஜனாதிபதி டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். இதனால் ஜனாதிபதியை சந்திக்க முடியாததால் பழங்குடியின மக்கள் வருத்தம் அடைந்தனர்.

மீண்டும் அனுமதி

இதைத்தொடர்ந்து நீலகிரி பண்டைய பழங்குடியினர் சார்பில், ஜனாதிபதியை சந்திக்க விருப்பம் தெரிவித்து பண்டைய பழங்குடியின தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பகுமார் ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தை கடிதம் மூலம் தொடர்பு கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வருகிற 12-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்திக்க அனுமதி கிடைத்து உள்ளது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோத்தர், தோடர், இருளர், குறும்பர், பனியர், காட்டு நாயக்கர் ஆகிய 6 வகையான பண்டைய பழங்குடி இனத்தை சேர்ந்த 57 பேர் பஸ் மூலம் ஊட்டியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனர். இவர்கள் 12-ந் தேதி ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இவர்களுடன் தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளான கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இருளர் இனத்தை சேர்ந்த 20 பேர் இணைந்து உள்ளனர். அவர்களும் ஜனாதிபதியை நேரில் சந்திக்கின்றனர். இதற்கான முழு செலவும் சென்னை பழங்குடியினர் இயக்குனரகம் ஏற்று உள்ளது.


ஜனாதிபதிக்கு பரிசாக செல்லும் நீலகிரி கலை பொருள்கள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவை நீலகிரியில் பார்க்க முடியாததால், நீலகிரி பண்டைய பழங்குடியின பேரவை சார்பில் மீண்டும் அவரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் இந்த முறை அவர்களுக்கு மட்டும் அல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களும் ஜனாதிபதியை சந்திக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 75 வகையான பண்டைய பழங்குடி இனத்தை சேர்ந்த 1500 பேர் ஒரே நாளில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து பண்டைய பழங்குடியின மக்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை நேரில் சந்திக்கும்போது இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் மூங்கிலால் செய்த கைவினைப் பொருட்களையும், குறும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் பிரத்யேக ஓவியங்களையும், தோடர் இனத்தை சேர்ந்தவர்கள் எம்ராய்டிரி துணிகளையும், கோத்தர் இன மக்கள் பாரம்பரிய சால்வையையும் பரிசாக வழங்க உள்ளனர்.


Next Story