பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்
பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதி சான்றிதழ் வழங்காததால் படிப்பு தடைபடுவதாக அவர்கள் புகார் கூறினர்.
பள்ளி மாணவ, மாணவிகள்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் தமிழக ஆதியன் பழங்குடியின மக்கள் நல சங்க தலைவர் வீரையன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 நிமிடம் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். அதன்படி அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
ஆதியன் பழங்குடியின மக்கள்
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருகிறோம். ஆதியன் பழங்குடி இனத்தை சேர்ந்த 35 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன.
எங்கள் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. எங்களின் மூதாதையர்களுக்கு ஆதியன் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் வழங்காததால் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது.
சாதி சான்றிதழ்
எங்களது உறவினர்கள் பட்டுக்கோட்டை தாலுகா மேல ஒட்டங்காடு, துறவிக்காடு, சுக்கிரன்பட்டி, சமத்துவபும் ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் எங்கள் பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சாதி சான்றிதழ் வழங்க கும்பகோணம் கோட்டாட்சியருக்கு, கலெக்டர் உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.