களிமண்ணால் உருவங்கள் செய்து பழங்குடியின மாணவர்கள் அசத்தல்
பொக்காபுரம் அரசு பள்ளியில் கலைத்திருவிழாவையொட்டி களிமண்ணால் உருவங்கள் செய்து பழங்குடியின மாணவர்கள் அசத்தினர்.
கூடலூர்
பொக்காபுரம் அரசு பள்ளியில் கலைத்திருவிழாவையொட்டி களிமண்ணால் உருவங்கள் செய்து பழங்குடியின மாணவர்கள் அசத்தினர்.
கலைத்திருவிழா
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் கடந்த 21-ந் முதல் வருகிற 26-ந் தேதி வரை கலைத்திருவிழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஓவியம், இசை, நடிப்பு, நடனம், பல குரல் பேச்சு உள்பட பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலத்தில் மசினகுடி, பொக்காபுரம், மாயாறு, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 170 பேர் படித்து வருகின்றனர். கடந்த 1 வாரமாக மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் பழங்குடியின மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
களிமண்ணால் உருவங்கள்
இதில் சிவன், மஞ்சு, ராகுல், மனு, கீதா, சத்யா உள்ளிட்ட மாணவ-மாணவிகள் களிமண்ணால் விநாயகர், கோவில்கள், அடுக்குமாடி வீடுகள், ஆமை, பாத்திரங்கள் உள்பட பல்வேறு உருவங்களை செய்து அசத்தினர். இதை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் நேரில் பார்த்து பாராட்டினர். இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகினர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி கூறியதாவது:-
பழங்குடியின மாணவர்கள் களிமண்ணால் பல்வேறு சிற்பங்களை உருவாக்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் சிவன் உள்ளிட்ட சில மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். தொடர்ந்து பயிற்சி அளித்தால் எதிர்காலத்தில் சிறந்த சிற்பங்களை உருவாக்கக்கூடிய வகையில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. அதற்காகத் திட்டமிட்டு மாணவர்களை தயார் செய்வதற்கான நடவடிக்கை அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.