பழங்குடியின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்
பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.
கல்வி உதவித்தொகை
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பழங்குடியினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கல்வி உதவித்தொகை திட்டத்தில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500, 6-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,000, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2,500, பிரீமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 ஆயிரம், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.7,500, உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பம்
இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமான சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் எண் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பின் மூலம் பயன்பெற அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் இணையதளம் வாயிலாக கல்வி உதவித்தொகை விவரங்களுடன் புதிய விண்ணப்பங்கள் பதிவேற்றுவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.