சங்ககிரி கோட்டையில்தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி அஞ்சலி
சங்ககிரி
சங்ககிரி கோட்டையில் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தீரன் சின்னமலை
சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை, காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே பல்வேறு போர்ப்பயிற்சிகளை பெற்ற அவர், இளைஞர் படைகளை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.
ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள், அவரோடு இருந்தவர்களை வைத்தே அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து, அவரையும், அவரது சகோதரர்களையும் கைது செய்து, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஜூலை 31 (ஆடிப்பெருக்கு) அன்று தூக்கிலிட்டனர். இதைத்தொடர்ந்து ஆடிப்பெருக்கு அன்று தீரன் சின்னமலை நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரசின் சார்பில் ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் அஞ்சலி
அதன்படி, இந்தாண்டு தீரன் சின்னமலையின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் சங்ககிரி-திருச்செங்கோடு-பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் சங்ககிரி உதவி கலெக்டர் லோகநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.