பணியின் போது உயிர்நீத்த வனத்துறையினருக்கு அஞ்சலி
கோவை வன உயர் பயிற்சியகத்தில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை
கோவை வன உயர் பயிற்சியகத்தில் பணியின் போது உயிரிழந்த வனத்துறை பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய வன தியாகிகள் தினம்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 11-ந் தேதி வன தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் வன தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி அங்குள்ள நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் சேவாசிங் தலைமை தாங்கினார்.
இதில் போலீசார் கலந்து கொண்டு பணியின் போது உயிரிழந்த வனத்துறையினருக்கு 30 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த வனத்துறையினரின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி
இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு வளர்ப்பு யானை தாக்கி உயிரிழந்த உதவி பாகன் ஆறுமுகம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானை தாக்கி உயிரிழந்த பாகன் பாலன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டெருமை தாக்கி உயிரிழந்த வனக்காப்பாளர் ரவிராஜ் ஆகியோரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அரசு வேலை
இதையடுத்து பணியின் போது உயிரிழந்த வனத்துறையினரின் குடும்பத்தினரை கூடுதல் தலைமை வன பாதுகாவலர் சேவாசிங் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது அவர்களிடம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உள்பட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், பயிற்சி பெறும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.