திருச்சியில் 2 லாரிகள்-அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து-லாரி டிரைவர் பலி


திருச்சியில் 2 லாரிகள்-அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து-லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2023 1:02 AM IST (Updated: 22 Jun 2023 5:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 2 லாரிகள்-அரசு பஸ் அடுத்தடுத்து மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருச்சி

மதுரை திருப்பாலை காயத்ரி நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 29), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி பால்பண்ணை அருகே கன்டெய்னர் லாரியை ஓட்டிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிரைலர் லாரி திடீரென்று பிரேக்பிடித்து நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காததால் பாண்டி ஓட்டிவந்த கன்டெய்னர் லாரி, டிரைலர் லாரியின் பின்னால் மோதியது. அதேநேரம் இரு லாரிகளையும் பின்தொடர்ந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ், கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கன்டெய்னர் லாரி டிரைவர் பாண்டி படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். அரசு பஸ் கண்டக்டர் காமாட்சி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் லாரியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story