திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் முற்றுகை போராட்டம்


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
x

தணிக்கைச்சான்று வழங்காததை கண்டித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நிதி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மணிகண்டம், ஜூன்.29-

தணிக்கைச்சான்று வழங்காததை கண்டித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நிதி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை மூலம் தணிக்கைச்சான்று வழங்கப்படும். இந்நிலையில் கடந்த மே மாதம் வரை தணிக்கைச் சான்று வழங்கிய உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெறும் 10 பணியாளர்களுக்கு தணிக்கைச்சான்று நேற்று வரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நிதி அலுவலர் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறையில் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நிதி அலுவலர், உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறையின் உதவி இயக்குனர் மற்றும் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக பணியாளர் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் அருணாச்சலம் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, தணிக்கைச்சான்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கணேசன் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நாளைக்குள் (இன்று) தணிக்கைச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story