பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் - சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...!
திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திருச்சி காவிரி பாலமும் திகழ்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது.
பழமையாக திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி காவிரி பாலம் ரூ.6 கோடியே 87 லட்சம் மதிப்பிட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பாலத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார்.
அதன்படி, ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள், ஓடத்துறை ரயில்வே பாலம், கும்பகோணத்தான் சாலை வழியாக திருவானைக்காவல் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். அதேபோன்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் மேம்பாலத்தின் வழியாக, கும்பகோணத்தான் சாலை மற்றும் ஓயாமரி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நகர வழி போக்குவரத்தை தவிர்த்து, புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அதுபோல, சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்களும், டோல்கேட் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்ட திருச்சி காவிரி பாலத்தால் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலால் சாலையில் ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர். இதனை அறிந்த அமைச்சர் கே.என்.நேரு போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பாக சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.