திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.
திருச்சி கே.கே.நகர் சுதான நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 49). இவர் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தார். மதியம் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டர் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டு அருகே சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 1999-ம் ஆண்டு கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் நுண்ணறிவு பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பணியாற்றி பின்னர் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.