திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இருவழிப்பாதையாகிறது


திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இருவழிப்பாதையாகிறது
x
தினத்தந்தி 23 Jun 2023 7:49 PM GMT (Updated: 24 Jun 2023 11:29 AM GMT)

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இருவழிப்பாதையாகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இருவழிப்பாதையாகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஜங்ஷன் மேம்பாலம்

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய பஸ்நிலையம், திண்டுக்கல் சாலை, ரெயில்வே ஜங்ஷன் சாலை, கிராப்பட்டி வழியாக மதுரை சாலை, மன்னார்புரம் வழியாக சென்னை சாலை என மொத்தம் 5 வழித்தடங்களை இணைக்கும் வகையில் ரூ.168 கோடி மதிப்பில் பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.

இதில் முதல்கட்டமாக மத்திய பஸ் நிலைய சாலை, திண்டுக்கல் சாலை, கிராப்பட்டி சாலை, ஜங்ஷன் சாலை ஆகியவை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் மன்னார்புரம் வழியாக சென்னை வழித்தடத்தை இணைப்பதற்கான பாலம் அமைக்கும் பணிகள் ராணுவ நிலம் கையகப்படுத்த வேண்டிய காரணத்தால் தாமதமானது.

ஒரு வழிப்பாதையானது

பின்னர் 8 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த மே மாதம் 29-ந் தேதி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. ஆரம்பத்தில் இந்த பாலத்தில் மத்திய பஸ்நிலையம், கருமண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் ஏறி இறங்கி சென்று வந்தன.

பின்னர் திடீரென பாலத்தின் 3 பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. அதாவது, மத்திய பஸ் நிலையம், கருமண்டபம் ஆகிய வழித்தடங்கள் ஒருவழிப்பாதையாக்கப்பட்டு, வாகனங்கள் பாலத்தில் ஏறி செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. ஜங்ஷன் மார்க்கமாக உள்ள பகுதி ஏற்கனவே ஒருவழிப்பாதையாக தான் உள்ளது. ஆகையால் இப்போது இந்த பாலத்தில் எடமலைப்பட்டிபுதூர் கிராப்பட்டி வழி மற்றும் மன்னார்புரம் வழி ஆகிய இருவழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் ஏறி செல்ல முடியும். மற்ற 3 வழித்தடங்களிலும் ஏறி செல்ல முடியாது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

விபத்து நடப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகாலம் காத்து கிடந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்ட பாலத்தில் 3 வழித்தடங்களை அடைத்து வைத்துவிட்டு இரு வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் ஏறி செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் எதற்காக இந்த பாலம் என்ற கேள்வியை வாகன ஓட்டிகள் முன் வைத்தனர்.

இவ்வாறு அடைத்து வைத்துள்ளதால் அரிஸ்டோ மேம்பாலம் கீழ் பகுதியில் அம்பேத்கர் சிலை அருகே காலை, மாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே இந்த பாலத்தை இருவழிப்பாதையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.


Next Story