திருச்சி மாநகராட்சி கூட்டம்


திருச்சி மாநகராட்சி கூட்டம்
x

திருச்சி மாநகராட்சியில் சாதி ரீதியில் இருக்கை ஒதுக்குவதா? என கேட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் சாதி ரீதியில் இருக்கை ஒதுக்குவதா? என கேட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சியின் முன்னுரிமை

திருச்சி மாநகராட்சியில் சாதாரணக்கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள், ஊழியர்கள் ஆகியோர் மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் அந்தந்த கட்சியின் முன்னுரிமை அடிப்படையில் இருக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் உள்ள குறைகளை கூறுவதற்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் 17-வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து நின்று இங்கே மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களை எதன் அடிப்படையில் அமர வைத்து உள்ளீர்கள் என்றும், சாதி அடிப்படையில் என்னை பின் வரிசையில் அமர வைத்து உள்ளீர்கள். இதற்கு மேயர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கட்சியின் பலத்தை பொறுத்து....

அப்போது 60-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் காஜாமலை விஜய் எழுந்து நின்று சாதி அடிப்படையில் பேசக்கூடாது. கண்ணியமாக பேசுங்கள் என்று கூச்சல் போட்டார். இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் அன்பழகன், மாநகராட்சி கூட்டத்தில் இது போன்று பேசக்கூடாது, கவுன்சிலர்கள் அந்தந்த கட்சியின் முன்னுரிமை அடிப்படையிலும், அந்த கட்சியின் பலத்தை பொறுத்தும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சினை எதுவும் செய்ய வேண்டாம் என்றார்.

31-வது வார்டு கவுன்சிலர் சுஜாதா (காங்கிரஸ்), நான் முன்னாள் மேயராக இருந்தவர். மேலும் கட்சியில் முக்கிய உறுப்பினராக உள்ளேன். கட்சியின் முன்னுரிமை அடிப்படையில் இருக்கை ஒதுக்கப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் இடம் ஒதுக்குவதில் எனக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. எனவே நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து சுஜாதா கதவை திறந்து வெளியேற முயற்சி செய்தார்.

விளக்கம்

இதனிடையே கூட்ட அரங்கிற்கு வந்த 2-வது வார்டு கவுன்சிலர் ஜவகர் (காங்கிரஸ்) அவரை சமாதானப்படுத்தி முன் வரிசையில் அமர வைத்தார். 47-வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் (அ.ம.மு.க.), மாமன்றத்தில் கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்வது எதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது? என்று மேயரிடம் விளக்கம் கேட்டார். இதற்கு மேயர் அன்பழகன் இந்த விவகாரத்தில் நான் ஏற்கனவே விளக்கம் கூறிவிட்டேன். இந்த பிரச்சினையை இதோடு விட்டு விடுங்கள் என்றார்.


Next Story