திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்பட 90 ரெயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த நிலையில், மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவரை சந்தித்த தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை புதிய ரெயில் பாதை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல்-அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதுகுறித்து, மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, மீண்டும் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர், இதுகுறித்து ரெயில்வே போர்டுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல மயிலாடுதுறை ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் வர்த்தக சங்கத்தலைவர் செல்வம் கோரிக்கை மனு அளித்தார். இந்த ஆய்வின் போது எஸ்.ஆர்.எம்.யூ. சங்க திருச்சி கோட்டத்தலைவர் மணிவண்ணன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.