திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மூவர்ண பலூன்


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மூவர்ண பலூன்
x

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மூவர்ண பலூனை கலெக்டர் விசாகன் பறக்க விட்டார்.

திண்டுக்கல்

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி வீடுகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி பறக்கவிடப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் 40 ஆயிரம் வீடுகள், பழனி நகராட்சியில் 12 ஆயிரத்து 875 வீடுகள், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகளில் தலா 12 ஆயிரம் வீடுகள், 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 100 வீடுகள், 306 ஊராட்சிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 437 வீடுகள் என மொத்தம் 5 லட்சத்து 91 ஆயிரத்து 22 வீடுகளில் தேசியகொடி ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

இதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மற்றொரு நிகழ்வாக மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜி.டி.என். கலைக்கல்லூரி சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தேசியகொடியின் மூவர்ணத்தில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன் கலந்து கொண்டு ராட்சத பலூனை பறக்கவிட்டார்.

இந்த பலூன் சுதந்திர தினமான நாளை (திங்கட்கிழமை) வரை பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஆணையர் சிவசுப்பிரமணியன், ஜி.டி.என். கல்லூரி தாளாளர் கே.ரெத்தினம், கல்லூரி இயக்குனர் துரை, கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, கவுன்சிலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story