அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3-வது நாளாக முயற்சி..!
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கம்பம்,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களையும் நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காட்டு யானை கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விடப்பட்டது.
தமிழக-கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடுவதற்கு முன்பு அதன் கழுத்தில், ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து, தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது. கம்பத்தில் இருந்து சுருளிபட்டிக்கு இடம்பெயர்ந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், போலீசார் 3-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அரிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுருளிப்பட்டி யானைகஜம் வனபகுதியில் இருந்து யானை நகர்ந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு கருதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.