தி மு க பிரமுகர் தீக்குளிக்க முயற்சி


தி மு க  பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
x

கலெக்டர் அலுவலகம் முன்பு தி மு க பிரமுகர் தீக்குளிக்க முயற்சி கடலூரில் பரபரப்பு

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிப்பதற்காக நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்ததும், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

விசாரணையில், அவர் மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சிவகுரு(வயது 33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை சொந்த செலவில் சிவகுரு செய்து வைத்துள்ளார். ஆனால் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சிலையை அகற்றி விடுவதாக கூறியதை தட்டிக்கேட்டதால், அவர் சிவகுருவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் அந்த வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி தான் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், உங்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்று தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story