குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

1½ டன் ரேஷன் அரிசி

குமரி மாவட்டம் கல்குளம் வட்ட வழங்கல் அதிகாரி சுனில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மண்டைக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த காரில் சோதனை போட்ட போது, 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைத்தனர். கார் வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

விசாரணை

இந்தநிலையில் ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் ஒரு வீட்டின் பின்னால் தென்னந்தோப்பில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீஸ் ஏட்டு சஞ்சய், தனிபிரிவு போலீஸ் சுதாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 50 சாக்கு மூடைகளில் 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ரேஷன் அரிசி மூடைகளை கோணத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தனர். இரு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story