இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மாத்திரை பறிமுதல்
தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசாரை கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசாரை கைது செய்தனர்.
கண்காணிப்பு
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக பல்வேறு அத்தியாவசிய பொருட்கள், களைக்கொல்லிகள், மருந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காயல்பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து மருந்து பொருட்களை கடத்தி செல்வதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் போலீசார் ஆறுமுகநேரி சோதனைச்சாவடியில் இருந்து காயல்பட்டினம் நோக்கி செல்லும் பைபாஸ் ரோட்டில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ரூ.32 லட்சம்
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2 கார்களை மடக்கி சோதனை செய்தனர். அந்த கார்களில் 26 அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக போலீசார் அந்த அட்டை பெட்டிகளை சோதனை செய்தனர்.
அதில் 100 மில்லி அளவு கொண்ட 2 ஆயிரத்து 500 சிரப் பாட்டில்கள், ஒரு லட்சம் மாத்திரைகள், 100 மில்லி அளவு கொண்ட 1000 மருந்து பாட்டில்கள், 1000 கர்ப்பம் குறித்து கண்டறியும் சாதனம், ஒரு செல்போன் ஆகியவை இருந்தன. இதன் இலங்கை மதிப்பு ரூ.32 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போலீசார் மருந்து பொருட்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.
இலங்கைக்கு..
இந்த மருந்து பொருட்களை கடத்த முயன்றதாக ஆறுமுகநேரியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஜெயபாரதி ராஜா (வயது 36), இவருடைய தம்பி ஜெயபாரதி சாரதி (34), சங்கரலிங்கம் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் சென்னையில் உள்ள மொத்த மருந்து விற்பனை நிறுவனத்திடம் இருந்து மருந்து பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கொண்டு வந்து உள்ளனர். பின்னர் காயல்பட்டினம் கடற்கரை வழியாக படகில் ஏற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிடிபட்டவர்களையும், கடத்தப்பட இருந்த மருந்து பொருட்களையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.