கரும்புக்கான வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம்


கரும்புக்கான வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம்
x

கரும்புக்கான வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ.. கடந்த 28-ந் தேதி வரை 298.55 மி.மீ. மழை பெறப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதம் முடிய இயல்பு மழையளவை விட 24.96 மி.மீ. குறைவாக மழை பெறப்பட்டு உள்ளது என்றார். அப்போது விவசாயிகள் கலந்துகொண்டு பேசியதாவது,

ஆர்.புதுப்பட்டியில் குட்டை மற்றும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை அகற்ற வேண்டும். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன. அதை தடுக்க வேண்டும். 100 நாட்கள் திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றனர்.

முத்தரப்பு கூட்டம்

மேலும் விவசாயிகள் கூறியதாவது, தமிழக அரசு இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 ஊக்கத்தொகை அறிவித்து உள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். இதேபோல் கரும்பு வெட்டுக்கூலி அதிக அளவில் கொடுக்க வேண்டி உள்ளது. எனவே கலெக்டர் தலைமையில் முத்தரப்பு கூட்டத்தை கூட்டி, வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும் நாமக்கல் உழவர்சந்தையில் கழிவுநீர் பிரச்சினை உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர் உழவர்சந்தையை ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் மேம்படுத்த அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பணி தொடங்கும் என்றார்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

முன்னதாக, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பட்டுவளர்ப்பு கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story