லாரி-கார் மோதல்; ஒருவர் பலி


லாரி-கார் மோதல்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் லாரி, கார் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி, மகன்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ராணிப்பேட்டை மாவட்டம் சிமிரி தாலுகா கலவைப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). இவர் நேற்று குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை ராணிப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (47) என்பவர் ஓட்டினார்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் சென்றபோது, அந்த சாலையோரத்தில் உள்ள எடை நிலையத்தில் இருந்து ஒரு லாரி மெயின் ரோட்டில் ஏறி திரும்பி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் அந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த பெருமாள், அவருடைய மனைவி வரலட்சுமி (48), மகன்கள் யுவராஜ் (25), அருண்குமார் (30), டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி சிப்காட் போலீசார் விரைந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story