அரசு பஸ் மீது லாரி மோதி 13 பேர் காயம்
அரசு பஸ் மீது லாரி மோதி 13 பேர் காயம் அடைந்தனர்.
கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கே.பேட்டை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அதே சாலையில் திருச்சியில் இருந்து கரூருக்கு விறகுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ் மீது லாரி மோதியது.
இதில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் (44), லாரி டிரைவர் சக்திவேல் (28) உள்பட 13 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 13 பேரையும் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.