மரக்கட்டைகளை ஏற்றி சென்ற டிராக்டர் டிப்பர் மீது லாரி மோதல்; டிரைவர் பலி
கீழப்பழுவூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றி சென்ற டிராக்டர் டிப்பர் மீது லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
பெரம்பலூர் மாவட்டம் உடுப்பியம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சேகர் (வயது 47). இவர் அரியலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை நோக்கி சேகர் சென்று கொண்டு இருந்தார்.
கீழப்பழுவூர்-சாத்தமங்கலம் அருகே தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 4 மணியளவில் அந்த வழியாக டிராக்டரின் டிப்பரில் வெளியே நீட்டியவாறு கட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டு இருந்தது.
உடல் நசுங்கி சாவு
இந்தநிலையில் திடீரென டிராக்டர் டிரைவர் எந்தவித சிக்னலும் அறிவிக்காமல் பிரேக் போட்டதால் பின்னால் சேகர் ஓட்டி வந்த சிமெண்டு லாரியை கட்டுப்படுத்த முடியாமல் நேராக மரக்கட்டைகளை ஏற்றி சென்ற டிப்பரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்த கீழப்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.