மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; மினிபஸ் கண்டக்டர் சாவு
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மினிபஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மினிபஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.
மினிபஸ் கண்டக்டர்
தக்கலை அருகே உள்ள மருவூர்கோணம் பகுதியை ேசர்ந்தவர் அஜீஸ் (வயது 26). இவர் மினிபஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து இந்திராணி என்ற மனைவியும், 2½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
அஜீஸ் தினமும் இரவு வேலை முடிந்ததும் மினிபஸ்சை திக்கணங்கோட்டில் நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
லாரி மோதியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் வேலை முடிந்ததும் மினி பஸ்சை திக்கணங்கோட்டில் நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அதன்படி முளகுமூடு சந்திப்பை கடந்து சென்றபோது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜீஸ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
சாவு
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை அஜீஸ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அஜீசின் மனைவி இந்திராணி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகிறார்கள்.