மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்ஊராட்சி மன்ற தலைவியின் மகளுடன் தாத்தா, பேரன் சாவுவிருத்தாசலம் அருகே சோகம்


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்ஊராட்சி மன்ற தலைவியின் மகளுடன் தாத்தா, பேரன் சாவுவிருத்தாசலம் அருகே சோகம்
x
தினத்தந்தி 2 Jan 2023 6:30 PM GMT (Updated: 2 Jan 2023 6:30 PM GMT)

விருத்தாசலம் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் மகளுடன் தாத்தா, பேரன் பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருளரசன் (வயது 40). இவரது மனைவி சங்கீதா (35). சங்கீதா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர்களுக்கு பிருத்திவிராஜ் (21) என்ற மகனும், ஓவியா (15) என்ற மகளும் உள்ளனர். ஓவியா விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று ஓவியா வழக்கம்போல பள்ளிக்கூடம் சென்றார். அருளரசனும் அவரது மனைவி சங்கீதாவும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

லாரி மோதியது

பள்ளிக்குச் சென்ற ஓவியாவை அழைத்து வருவதற்காக, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினர் தாத்தா முறையான எலக்ட்ரீசியன் குமாரசாமி (55) என்பவர், தனது மகள் வழி பேரன் தருணை (6) அழைத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் தனியார் பள்ளிக்குச் சென்றார்.

அங்கு, பள்ளி முடிந்து வந்த ஓவியாவை அழைத்து கொண்டு மீண்டும் தொரவளூர் நோக்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கோமங்களம் அருகே சென்ற போது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சாம்பல் ஏற்றி சென்ற லாரி ஒன்று குமாரசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

3 பேர் சாவு

இந்த விபத்தில் குமாரசாமி, ஓவியா, தருண் ஆகிய 3 பேரும் பலத்த தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு வேகமாக சென்ற லாரி குறித்து விருத்தாசலம் போலீசார் வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

லாரியை மடக்கி பிடித்தனர்

அதன்பேரில் போலீசர், அந்த லாரியை வேப்பூரில் மடக்கி பிடித்து, டிரைவரிடம் விசாரித்தனர். அதில் லாரியை ஓட்டி வந்தது மாத்தூர் டிரைவர் மணிகண்டன் (34) என்பது தெரியவந்தது. பின்னர் லாரி, மணிகண்டனை விருத்தாசலம் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

விபத்து காரணமாக விருத்தாசலம் - வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story