தமிழகத்தில் நவம்பர் 9-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்


தமிழகத்தில் நவம்பர் 9-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம்
x

கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை கண்டித்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 9-ந் தேதி லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற இருப்பதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறினார்.

நாமக்கல்

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளன தலைவர் தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ள கனரக வாகனங்களுக்கான வரி உயர்வை கண்டித்து வருகிற நவம்பர் 9-ந் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து சம்மேளன தலைவர் தனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஆன்லைன் வழக்கு, காலாண்டு வரி உயர்வு போன்றவற்றால் லாரி உரிமையாளர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய 125 உறுப்பு சங்கங்களின் நிர்வாகிகளும், லாரிகளை இயக்க முடியவில்லை என கருத்து தெரிவித்து உள்ளனர்.

அடையாள வேலைநிறுத்தம்

நாங்களும் கடந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் வரி உயர்வை திரும்ப பெற நேரில் வலியுறுத்தினோம். அவர் முதல்-அமைச்சரிடம் பேசிவிட்டு பதில் சொல்வதாக கூறினார். ஆனால் இதுவரை பதில் இல்லை. எனவே பொதுக்குழு முடிவின் படி எங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற நவம்பர் 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 6.5 லட்சம் லாரிகள் நிறுத்தப்படும். இதேபோல் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட சுமார் 20 லட்சம் இதர வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளன. பெட்ரோல், டீசல், பால் லாரிகளையும் நிறுத்த முயற்சி செய்து வருகிறோம்.

எங்களது அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழக அரசு செவிசாய்க்காத பட்சத்தில், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சுங்கச்சாவடிகள் பிரச்சினையை முன்னிறுத்தி நவம்பர் 25-ந் தேதி அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்க உள்ளது. அதில் எங்களுடைய கோரிக்கையையும் சேர்த்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபடுவோம்.

ரூ.30 கோடி இழப்பு ஏற்படும்

எங்களின் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு மட்டும் ரூ.30 கோடி வாடகை இழப்பு ஏற்படும். இதுதவிர பலகோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேங்கும். எனவே சுமார் 40 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்ட காலாண்டு வரியை அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழகத்தை ஒப்பிடும் போது, கர்நாடகாவில் இந்த வரி சற்று குறைவாகவே உள்ளது. அதே சமயம் அங்கு டீசல் ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 16 காசுகளும், புதுச்சேரியில் ரூ.9-ம் குறைவாக உள்ளது. நாங்கள் தொழில் அதிபர்கள் அல்ல. லாரி உரிமையாளர்களாக இல்லாமல் இருந்து இருந்தால், எங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கும் அரசின் உரிமை தொகை ரூ.1000 கிடைத்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுங்கச்சாவடிகள்

கூட்டத்தில், மாநில அரசு அறிவித்துள்ள 32 காலாவதியான சுங்கச் சாவடிகளை மத்திய அரசு அகற்ற வேண்டும். ஜி.பி.எஸ். முறையில் சுங்க கட்டணம் வசூலிக்க இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சம்மேளன நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story