சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு


சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
x

சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.

அரியலூர்

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்ட பகுதியில் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் இருந்து தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் மூலம் 24 மணி நேரமும் ரெட்டிபாளையம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்பு கற்கள் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரு சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து நாயக்கர்பாளையம் வழியாக சுண்ணாம்புக்கற்களை ஏற்றிய டிப்பர் லாரிகள் அதிக பாரம் ஏற்றியிருந்ததுடன், முறையாக தார்ப்பாய் போடாததால் சாலையில் சுண்ணாம்பு கற்கள் சிதறியுள்ளது. இதனால் சாலை சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை மறித்து, சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, லாரிகளில் முறையாக தார்ப்பாய் கட்டியும், அளவுக்கேற்ப பாரம் ஏற்றியும் லாரிகள் மெதுவாக இயக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story