விதிமுறையை மீறி கற்கள், மணல் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல்
சப்-கலெக்டர் நடத்திய திடீர் சோதனையில் விதிமுறையை மீறி கற்கள், மணல் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
சப்-கலெக்டர் நடத்திய திடீர் சோதனையில் விதிமுறையை மீறி கற்கள், மணல் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சப்-கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி குஞ்சிபாளையம் பிரிவில் சப்-கலெக்டர் பிரியங்கா வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தார். மேலும் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் சமத்தூர் அருகே உள்ள பொன்னாச்சியூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 24) என்பதும்,அந்த வாகனம் கோவை மதுக்கரை திருமலையாம்பாளையத்தில் இருந்து அம்பராம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதிக்கு கிராவல் மண் ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் அளித்த அனுமதி சீட்டை ஆய்வு செய்த போது, கிராவல் மண்ணை எடுத்து செல்ல வேண்டிய நேரம் குறிப்பிடப்படவில்லை. அனுமதிக்கப்பட்டு இருக்கும் அளவை விட கூடுதலாக ஏற்றி சென்றதும் தெரியவந்தது.
டிரைவர்கள் கைது
மேலும் அந்த வழியாக வந்த மற்றொரு டிப்பர் லாரியை சப்-கலெக்டர் மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் பொள்ளாச்சியை அடுத்த போளிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த அமீர் (29) என்பதும் கோலார்பட்டியில் உள்ள ஒரு தனியார் குவாரியில் இருந்து செமனாம்பதியில் உள்ள கிரசர் கம்பெனிக்கு சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அனுமதி சீட்டை ஆய்வு செய்ததில், அந்த சீட்டை பலமுறை பயன்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் 2 லாரிகளையும், அதன் டிரைவர்களையும் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், அமீர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.