வருமானவரித்துறையில் பதிவு செய்யாவிட்டால் அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு கிடையாது
வருமானவரித்துறையில் பதிவு செய்யாவிட்டால் அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு கிடையாது
வருமானவரித்துறையில் பதிவு செய்யவில்லை என்றால் அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு கிடையாது என்று தலைமை ஆணையாளர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
வருமானவரித்துறை சார்பில் வரிவிலக்கு மற்றும் வரிபிடித்தம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் நடந்தது. கூடுதல் ஆணையாளர் ஜஸ்டின் (வரிபிடித்தம்) வரவேற்றார். தமிழக மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை தலைமை ஆணையாளர் (வரிபிடித்தம் (டி.டி.எஸ்) ) எம்.ரத்தினசாமி, கோவை தலைமை ஆணையாளர் பூபால் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த கருத்தரங்கில் கோவையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை, தொண்டுநிறுவனங்கள்,பட்டய கணக்காளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கள் சந்தேகம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை ஆணையாளர் கே.ரவி ராமச்சந்திரன் (வரிவிலக்கு) பதில் அளித்தார்.பின்னர் வருமானவரித்துறை தலை மை ஆணையாளர் எம்.ரத்தினசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடைபிடிக்க வேண்டும்
அரசு எந்திரத்தின் அடிப்படை ஆதாரமே நிதிதான். அந்த நிதி வரிகள் மூலம் அரசுக்கு கிடைக்கிறது. பின்னர் அந்த வரியில் மத்திய அரசு குறிப்பிட்ட சதவீதத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. அந்த நிதியில் மாநில அரசு மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து கொடுக்கிறது.
இந்த வரியை பொதுமக்கள் எளிதாக செலுத்த பல்வேறு வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே வரி தொடர்பான சட்டத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வரிவிலக்கு
நாட்டில் ஏராளமான அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு வரிசெலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை கண்டிப்பாக வருமானவரித்துறையில் பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் பல அறக்கட்டளை பதிவு செய்யவில்லை. எனவே நாளை (25-ந் தேதி) பதிவு செய்ய கடைசி நாள் ஆகும்.
அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே தொண்டுநிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு உண்டு. பதிவு செய்யவில்லை என்றால் வரிவிலக்கு கிடையாது. அவர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டுமோ அந்த வரியுடன் அபராதமும் சேர்த்து செலுத்த வேண்டும்.
புதுப்பித்துக்கொள்ள வேண்டும்
அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அதை ஒவ்வொரு அறக்கட்டளைகளும் செய்ய வேண்டும்.
வரிசெலுத்துவதில் உள்ள சிக்கல்களை களைவது தொடர்பாக தமிழகம் முழுவதும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் வருமானவரித்துறையை சேர்ந்த வெங்கடேசன், பெனட்டிக் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை ஆணையாளர் பாரதி நன்றி கூறினார்.